
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஜீனா (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அல்மோரா மாவட்டம் சால்ட் தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர குமார் ஜீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து போராடினார்கள். அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இத்தகவலை கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு மாநில பாஜக தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர்.
ஜீனா மனைவி சமீபத்தில்தான் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து இருந்தார். அவர் இறந்த சில தினங்களிலேயே எம்.எல்.ஏ ஜீனா கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏவின் மறைவை அடுத்து மாநிலம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தை ஆளும் பாஜக கட்சி கைவிட்டுள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக அரசியல் பிரமுகர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கூட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்த் உள்ளிட்டோர் கொரோனா காரணமாக மரணமடைந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்