"வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் நல்லபடியாக அமையட்டும். எல்லா வளங்களும் செல்வங்களும் அமைதியும் மக்களுக்கு கிடைக்கட்டும். வறுமை ஒழிந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். நாடு, மொழி, இனம் காக்கப்பட வேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஆர்.பி உதயகுமார். சசிகலாவை அதிமுகவில் இணைத்தல், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை என எந்தக் கேள்விக் கேட்டாலும் புன்னகையுடன் பதில் அளிக்கும் ஆர்.பி உதயகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,
உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறாரே?
“ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். காவல்துறை விசாரிக்கிறது. எங்கள் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். ஒருவர் மீது வழக்கு இருப்பதாலேயே அவரைக் குற்றவாளியாகப் பார்க்கமுடியாது. ராஜேந்திர பாலாஜி வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்காக காத்திருக்கிறார். சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்காக, தீவிரவாதத்தில் மதவாதத்தில் ஈடுபடுகிற நபர்களை கையாள்வதுபோல முன்னாள் அமைச்சரை கையாள்வது உண்மையிலேயே பழிவாங்கும் நடவடிக்கை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது”.
சசிகலாவை அதிமுகவில் இணைக்கச்சொல்லி அண்ணாமலை வலியுறுத்துகிறாரே? ஏற்கெனவே, அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது என்ற விமர்சனங்கள் இருக்கும்போது அண்ணாமலை இப்படி பேசுவது உறுதியாகிவிடாதா?
“எனக்கு இதுகுறித்தெல்லாம் தெரியாது. அண்ணாமலையை தம்பிதுரை வீட்டுத் திருமணத்தில் கடைசியாகப் பார்த்தேன். நலம் விசாரித்துக்கொண்டோம். அவ்வளவுதான். சசிகலாவை இணைப்பது குறித்து ஜெயக்குமார் அண்ணன் விளக்கம் கொடுத்துவிட்டார். அவர் சொன்னப்பிறகு நான் சொல்வது சரியல்ல. சின்னம் எங்கு உள்ளது? கொடி எங்கு உள்ளது? தலைமை எங்கு உள்ளதோ அங்குதான் தொண்டர்கள் இருப்பார்கள். அதனால், எங்கள் தலைவர்கள் கட்சி நலன் கருதி முடிவு செய்வார்கள். ஏற்கெனவே, விளக்கமும் சொல்லிவிட்டார்கள். அதற்கு மாற்றுக்கருத்தே இல்லை.
சரி... சசிகலா உங்களிடம் பேசினாரா?
“அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை. சசிகலாவை சேர்ப்பது சேர்க்காதது குறித்தெல்லாம் கட்சித் தலைமை எடுக்கும் முடிவு. அதற்கு ஒன்னரைக் கோடித் தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்”.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
”ஒரு அமைச்சரவையில் யார் அமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டது. இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையை, அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, அவருக்கு எது ஜனநாயகம்? எது வாரிசு அரசியல்? எதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? எதை முகம் சுளிப்பார்கள் என்பதெல்லாம் திமுகவின் அமைச்சர்களுக்கும் தெரியும்; முதல்வருக்கும் தெரியும். உதயநிதியை அமைச்சராக்குவதென்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதில், எந்த மாற்றமுமில்லை. அதேசமயம், ஏழை எளியவர்களுக்கான கட்சி அதிமுக. சாமானியர்கள்தான் அதிமுகவை வழிநடத்துகிறார்கள்.
அதிமுக சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்று சீமான் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
”சீமானின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலேயே கேட்கச் சொல்லுங்கள். எப்படி சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுகிறோம் என்பதை மக்கள் சொல்வார்கள். முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களில் போராடினோம். ஆனால், சீமானோ எங்களுக்குப் பிறகுதான் தேனியில் மட்டும் நடத்திவிட்டுச் சென்றார். பெட்ரோல் டீசல் விலைக்குறைவு, விலைவாசி உயர்வு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு நிவாரணம், ஊக்கத்தொகை போன்றவற்றைக் கேட்டதற்காக எங்கள் மீது தமிழக அரசு வழக்குப் போட்டுள்ளது. இந்த ஏழு மாதங்களில் தமிழக அளவில் மூன்று கண்டன ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளோம். சட்டமன்றத்திலும் கேள்விக் கேட்கிறோம். இதற்குமேல், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சீமான் தான் சொல்லவேண்டும்”.
திமுக மீதான சீமான் விமர்சனங்களையும், நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் தாக்கியுள்ளதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
”சீமான் மட்டுமா? எங்கள் கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு ஏற்பட்ட தாக்குதலாகவே இதனையெல்லாம் பார்க்கிறேன். அதேசமயம், கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. அப்படியே பேசினாலும் நீதிமன்றத்தின் மூலமாக தண்டனைக் கொடுக்கவேண்டுமே தவிர நாமே கொடுப்பது ஆளும் அரசுக்கு அழகல்ல. காட்டுமிராண்டிக் காலத்தை நினைவுப்படுத்துவதாகவே இதுபோன்ற தாக்குதல்கள் உள்ளன. யாராக இருந்தாலும் வன்முறையை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல. அகிம்சையால் சுதந்திரம் பெற்ற தேசம் இது. வன்முறை எதற்கும் தீர்வாக அமையாது. ஆகவே, ஒரு கருத்து தவறாகவோ முரண்பட்டோ இருந்தால், அதனை சட்டரீதியாகத்தான் திமுக அணுகியிருக்கவேண்டும். நாம் நாகரீக உலகில் இருக்கிறோம். எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் விமர்சிக்கிறார்கள். எல்லோரையும் தேடி அடிக்கமுடியுமா? திமுக இப்படியே தொடர்ந்தால் மீண்டும் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது என்று மக்கள் நினைப்பார்கள். வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது. இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதேசமயம், கருத்து சொல்லும் சீமானும் பொறுப்புணர்வுடன் பேசவேண்டும். அது தனிநபர் தாக்குதலாகவோ விமர்சனமாகவோ இருக்கக்கூடாது. நம் அடிப்படைச் சட்டங்களை மீறாமல் கருத்துச் சொல்லவேண்டும். கண்டதெல்லாம் பேசக்கூடாது. தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் தன் இருப்பை காட்டுவதற்கும் வரம்புமீறி பேசக்கூடாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான லட்டர்பேடு கட்சிகள் உள்ளன. அவர்கள் எல்லோரும் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வரம்புமீறி எல்லைமீறி செயல்படுகிறார்கள். மக்கள் அதனை ரசிக்கமாட்டார்கள். சீமான் என்றில்லை யாராக இருந்தாலும் வரம்புமீறிப் பேசக்கூடாது. அதுவும், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”.
- வினி சர்பனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்