நீட் தேர்வு பயத்தால் மீண்டும் மீண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியா முழுக்கவே ஆண்டுதோறும் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை இதயத்தில் எரிகுண்டுகளாய் வீழ்ந்துகொண்டிருப்பது தொடர்கிறது. இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமியிடம் மாணவர்கள் தொடர் தற்கொலை குறித்து கேட்டோம். படத்தில் காட்சிகளாக மட்டுமல்லாமல் நிஜத்திலும் சாட்சியாக பேசினார்…
“தன் பெற்றோர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுக்க மன நிம்மதி இல்லாமல் நினைத்து நினைத்து.. உருகி உருகி.. ஒரு நடைபிணமாக வாழ்வதற்கான நிலைமையை பரிசாகத் தரணும்னு யாராவது நினைத்தால் அவர்கள்தான் தற்கொலை பண்ணனும். தன்னை பெற்றவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்று எந்த ஒரு மகனாவது.. மகளாவது நினைப்பார்களா? தற்கொலை செய்து எவ்வளவு பெரிய கொடிய தண்டனையைத் தருகிறார்கள். குழந்தையைப் பெற்று தூக்கி ஆளாக்கி ஏதோ ஒரு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தேர்வுக்கு பலிகொடுக்கவா பெற்றோர்கள் வளர்க்கிறார்கள்?
நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுப்பது அல்லது தேர்வை அரசு திரும்பப் பெறும்வரை மற்ற மாணவர்களுக்காக போராடுவது, அப்படியும் இல்லையென்றால் நீட் தேர்வை எப்படியாவது படித்து வெல்வது என இந்த மூன்று நிலைப்பாட்டில் ஒன்றைத்தான் எடுக்கவேண்டும். அதைவிடுத்து, உயிரை மாய்த்துக்கொள்வது என்பது நியாமல்ல. ஒரு வளரிளம் பருவத்தில் இருக்கும் பிள்ளையை தொலைத்துவிட்டால், அதே வயதில் எந்தப் பிள்ளையை பார்த்தலும் தன் பிள்ளைதானே பெற்றோரின் ஞாபகத்திற்கு வரும். அண்ணனுக்கு தங்கை, தம்பிக்கு அண்ணன், பெற்றோருக்கு பிள்ளை என இழந்துவிட்டு வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் வேதனையில் வெடிப்பார்கள். தங்கள் வாழ்வின் சுக, துக்கங்களில் ’அய்யோ இந்த நேரத்துல என் மகன் இல்லையே? என் தம்பி இல்லையே? என் தங்கை இல்லையே?’ என்று துக்கத்தில் துடிப்பார்கள். இந்தவொரு நிலைமையை தனது குடும்பத்திற்கு கொடுக்கவேண்டுமா? என்பதை மாணவர்கள் சிந்திக்கவேண்டும்.
நானெல்லாம் தேர்வில் பலமுறை தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். பத்தாவது படிக்கும்போது நான் பாஸ் பண்ணதே எனக்கு தெரியாது. அம்மாதான் ஒரு சாக்லேட் பாக்ஸை வாங்கிக்கொடுத்து ”டேய் இதை எடுத்துட்டுப்போய் எல்லோருக்கும் கொடு. நீ பாஸ் ஆகிட்டன்னு பக்கத்து வீட்டு வாத்தியார் சொன்னார்டா”ன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அப்போ, என் மார்க் என்னன்னுக்கூடத் தெரியாது. சாக்லேட் பாக்ஸை எடுத்துக்கிட்டுப்போய் எல்லா வீட்டுக்கும் கொடுத்தேன். அந்த நேரம் பார்த்து, எங்க பக்கத்து வீட்டுப் பையனை, அவங்க அப்பா போட்டு அடிச்சிக்கிட்டிருந்தாரு. என்னன்னு விசாரிச்சா அவன் கணக்குல 96 மார்க்தான் எடுத்திருக்கானாம். 100 மார்க் வாங்கலைன்னு அடிச்சிக்கிட்டிருந்தாங்க. அப்போதான், என் மார்க்கைப் போய் செக் பண்ணேன். ஜஸ்ட் பாஸ். அதையும் நான் கொண்டாடத்தான் செய்தேன். கொண்டாட்டம் என்பது நாம் எடுத்துக்கொள்வதில் இருக்கிறது. ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவுவுடன் இருக்கும் மாணவர்கள்தான், விரக்தியில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதுவே, மருத்துவத்தை தொழில் முறையாக பார்ப்பவர்கள் இந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டார்கள். மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு படிப்புக்குச் சென்று விடுவார்கள். ஆனால், இதனையே கனவாக நினைப்பவர்கள் லட்சியம் நிறைவேறாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள்” என்பவரிடம் “பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தமும் ஒரு காரணம் என்று எடுத்துக்கொள்ளாலாமா?” என்றோம்,
”இயல்பாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு படிக்கசொல்லி அழுத்தம் கொடுப்பது இயற்கையானதுதான். இந்த அழுத்தம் ப்ளஸ் டூவில் மட்டும் நடக்கவில்லை. எல்.கே.ஜியில் இருந்தே தொடர்கிறது. லட்ச ரூபாய் கட்டிவிட்டு பிள்ளைகள் ’டேடி’ என்று அழைக்காமல் போனால் கோவப்படுகிறார்களே? நம் மெக்காலே கல்வித்திட்டமே அழுத்தம் நிறைந்ததுதான். 365 நாள் படித்துவிட்டு அதனை 1 மணி நேரத்தில் தேர்வாக எழுதச்சொன்னால் எப்படி எழுதுவார்கள்? இங்கு தொழில்முறை சார்ந்த கல்விமுறை இல்லை. இது கல்வித்துறைக்குள் இருக்கும் பிரச்சனை. அதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் இதுபோன்ற முடிவு எடுப்பது ரொம்ப வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் தம்பி, தங்கைகளுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்வது என்னவென்றால், ’நான்லாம் தேர்வால் விரட்டப்பட்டவன் அல்ல.. பள்ளியாலேயே விரட்டப்பட்டவன். அதுமட்டுமல்ல வாழ்க்கையில் பல இடங்களில் தோற்றவன். என் முதல் படமே தோல்விதான். உதவி இயக்குநராக 10 வருடம் இருந்தேன். சென்னைக்கு யாருமே எதுவுமே தெரியாமல்தான் வந்தேன். உதவி இயக்குநர் ஆவதற்கே இரண்டரை வருடங்கள் ஆனது. அதனால், தோல்வி என்பது ஒரு வகையான அனுபவம். அந்த அனுபவத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டாலே, அதிலிருந்து வெல்வதற்கான வழி கிடைத்துவிடும். பதட்டப்படாமல் ஆழ்ந்து யோசிக்கத்தோன்றும். கட்டாயம் சரி செய்வதற்கான எதோ ஒன்று தென்படும். மனிதனுக்கு வெற்றி என்பது 10 வயதிலோ... 15 வயதிலோ... 25 வயதில் வரலாம்... ஏன் நாளைக்கே கூட வரலாம். அடுத்தக்கணம் என்பது மிக முக்கியமானது. அந்தக் கணத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அந்த ஆச்சர்யங்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என் வாழ்க்கையின் மூலம் நான் தெரிந்துகொண்ட உண்மை இது. இந்தப் பந்தில் விக்கெட் விழும் என்று நினைத்தால் கிரிக்கெட்டே கிடையாது. இந்தப் பாலில் கோல் விழும் என்று தெரிந்தால் ஃபுட்பாலே கிடையாது. வாழ்க்கையும் அதுதான்.
என் இளமைக் காலத்தில் மகாராஜா மாதிரி இருந்தவர்கள் இப்போது சிரமப்படுவதையும் இளமைப் பருவத்தில் மிகவும் வறுமை நிலையில் இருந்தவர்கள் நல்லா இருப்பதையும் பார்க்கிறேன். எனது ’நீர்ப்பறவை’ படத்தில் ஊரால் புறக்கணிக்கப்பட்டு குடிநோயாளியாகி பின்பு திருந்தி ஒரு புதிய மனிதனாய் வரும் நாயகனைப் பார்த்து, அவனது தாய் “கீழ சுத்துற சக்கரம் மேலயும் வரும். கப்பல்ல இருந்து வந்து இறங்குன ராஜா மாதிரியே இருக்கியேடா. என் கண்ணே பட்டுடும்டா” என்றுக்கூறி சந்தோஷப்படும்படி வசனம் எழுதினேன். அப்படித்தான், இன்னைக்கு கீழ சுத்துற சக்கரம் நாளைக்கு மேல வந்துதான் தீரும் என்பதை மாணவ சமூகத்திற்குச் சொல்லிக்கொள்கிறேன். மனதை விட்டுடாம நாளை வரப்போற நிலாவுக்காகவும், நாளை வரப்போற சூரியனுக்காகவும் பொறுமையாய் காத்திருங்கள். எல்லாமே நன்மையாய் முடியும்” என்று அக்கறையுடன் தனது அனுபத்தையும் ஒப்பிட்டு பேசியவரிடம் நீட் தேர்வு குறித்து கேட்டபோது,
”நீட் தேர்வு பயத்தால் எண்ணற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழந்து கதறிக்கொண்டிருக்கிறார்கள். படிக்க முடியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். இதனை எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், ”மத்திய அரசு நீட் தேர்வை திரும்பப் பெறவேண்டும்” என்று ஒரு கலைஞனாக, ஒரு படைப்பாளியாக, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாக மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார், அழுத்தமான குரலில்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்